சுவாமி சங்கரானந்தாவின் சைவப் படைப்புகள்
சிவக்கவி
உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே

முகங்களோர் ஐந்துடையாய் முக்கண் சுடருடையாய் உமையாள் துணையுடயாய் இடப வாகனமுடையாய் இருளை அகற்றும் இணையிலாச் சுடராய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
பிறையணி சடையுடையாய் பெருங்கங்கை தாங்கியவாய் அருளொளி பொழிந்தென்றும் அடியாரைக் காப்பவனாய் மறையொலி முழங்குகின்ற மாமறையின் பொருளாகி உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
திருநீறு மேனியெலாம் திகழ்ந்தொளிர் கொண்டவனாய் நாகத்தை அணிந்தவனாய் நாத உடுக்கை கொண்டவனாய் திரிசூலம் ஏந்திநின்ற திருவருளின் வடிவாகி உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
ஐந்தொழிலும் ஆற்றுகின்ற ஆதியாய் அந்தமாய் சிந்தையுள் ஒளிர்கின்ற சிவஞானச் செல்வனாய் பந்தங்கள் அறுத்தென்னைப் பரம்பொருளில் சேர்ப்பவனாய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்தக் கூத்தனாய் தும்புருவும் நாரதரும் தொழுதேத்தும் நாதனாய் ஓங்கார நாதத்தின் உட்பொருளாய் நின்றவனாய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
ஆலகால நஞ்சுண்டு அமரர்களைக் காத்தவனாய் நீலகண்ட நாதனென நிலவுலகம் போற்றிடவே காலனையும் வென்றுநின்ற கருணையின் கடலாகி உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
அண்ணாமலையாகி அருட்சுடராய் நின்றவனாய் கண்ணாலும் காணவொண்ணாக் கனலுருவப் பெருமானாய் எண்ணங்கள் கடந்துநின்ற இணையற்ற பரம்பொருளாய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
பசுபதியாய் உயிர்களெல்லாம் பரிவுடனே காப்பவனாய் பாசமெனும் தளையறுத்துப் பரஞானம் தருபவனாய் மாசறவே மனந்தெளித்து மலரடியைச் சேர்ப்பவனாய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
குருவாகி எனையாண்டு குற்றமெல்லாம் தீர்ப்பவனாய் திருவருளின் வழிகாட்டித் தெளிவினையே தருபவனாய் கருவாகி உயிராகிக் காணுமெங்கும் நிறைந்தவனாய் உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
பிறவியெனும் பெருங்கடலைப் பிழையறவே கடத்திடவே அறிவினிலே சிவஞான அருட்சுடரை ஏற்றிடுவாய் இறுதியிலும் உன் திருவடியின் இணைசேர அருளிடவே உள்ளம் முழுதும் உறைவாய் சிவனே
