சுவாமி சங்கரானந்தாவின் சைவப் படைப்புகள்

சிவக்கவி

அனுபவ ஆனந்தம்

சிவக்கவி அனுபவ ஆனந்தம் — ஆனந்தக் கூத்தனை வணங்கும் சுவாமி சங்கரானந்தா
01

அன்னையும் தந்தையும் அன்பினில் கூடி உயிர்த்துளி ஒன்றாய்க் கருவாகி!

02

பத்துத் திங்கள் கருவினில் வளர்ந்து உருவினைப் பெற்று பிறந்தேனே!

03

அன்னையின் மடியில் அமுதினை உண்டு மழலை மொழிந்து வளர்ந்தேனே!

04

பாலகனாகிப் பருவமும் எய்தி இளமைக் கனவில் மிதந்தேனே!

05

புத்தனின் பூமி விளைவித்த துயரால் பிறந்தமண் நீங்கிப் புலம்பெயர்ந்தேன்!

06

மற்றவர் போலே பெற்றவர் துணையால் மணமுறை கண்டு மகிழ்ந்தேனே!

07

ஈருயிர்ச் செல்வம் இல்லத்தில் மலர அவர்தம் சிரிப்பில் களித்தேனே!

08

எனக்கென விதித்த விதியினை நொந்து மணமுறிவாலே தடுமாறி,

09

மனமது நோகக் கண்விழி ஒழுக சிவனடி பற்றித் தொழுதேனே!

10

தன்விழியாலே என்விழி நோக்கித் கொற்றவன் அருளைத் தந்தானே!

11

அவனருள் கொண்டு இடரினை வென்று இன்னல்கள் நீங்கி எழுந்தேனே!

12

அடியவர் போற்றும் பொடியணி சிவனின் அருளொளி தன்னில் திளைத்தேனே!

13

பொன்னும் பொருளும் போகமும் யாவும் பொழுதொரு கனவென உணர்ந்தேனே!

14

இளமையும் தேயும் யாக்கையும் சாயும் இவ்வுல வாழ்வை உணர்ந்தேனே!

15

உடலிது ஒருநாள் உயிரது நீங்க ஒருபிடி நீறாய் மறைந்தேகும்!

16

நிலையிலா உடலை அரணெனத் தாங்கி உயிரினைப் பேண விழைந்தாலும்,

17

பிறவியின் பயனைப் பேரருள் தன்னில் பிறவாப் பெருநெறி அறிந்தேனே!

18

அடியவர் துயரை அருளினால் அகற்றும் அரனவன் பாதம் அடைந்தேனே!

19

மனமெனும் கோயிலில் மறையொளி வீச மாசுகள் நீங்கி மலர்ந்தேனே!

20

அகமதில் ஆடும் ஆனந்தக் கூத்தன் அருளினில் ஒன்றித் திளைத்தேனே!

21

ஆசைகள் நீங்கி ஆணவம் அகன்று அரனவன் அன்பில் கரைந்தேனே!

22

சிவநெறி ஒழுகிச் சேவைகள் செய்து அடியவர் தொண்டில் மகிழ்ந்தேகி!

23

கொற்றவன் தன்னை நித்தமும் போற்றி எஞ்சிய வாழ்வினை கழித்திடவே!

24

உமையொரு பாகா விடையினில் ஏறி வந்தருள் புரிந்து அருள்வாயே!

சுவாமி சங்கரானந்தா 🙏சைவ சனாதன சேவை மையம்